Monday 1 January 2018

புது வருட வாழ்த்துக்கள்...



உங்களுக்கு இந்த வாழ்த்து படம் பிடித்திருந்தால், இதை யாருக்காவது அனுப்ப நீங்கள் யோசித்தால், தயவு செய்து கீழ் வரும் E-mailக்கு எழுதுங்கள். சுஜி என்ற எனது பெயர் அல்லது water mark இல்லாமல் அனுப்பி வைக்கிறேன்.

E-mail: sujisittampalam@gmail.com

Tuesday 20 June 2017

நம்பிக்கை வரிகள்



தை பிறந்தால், வழி பிறக்கும் என்பார்கள்.
அது போல,
இருளுக்குள் செல்பவருக்கு ஒரு ஒளி கிடைத்தால் வழி தெரியும்...
வழி தெரிந்தால் சுகமாக முன்னேறலாம்...

கண்ணதாசன் வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் இங்கே...

Wednesday 1 February 2017

இன்றைய பகுத்தறிவாளர்கள்... 1

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க...


உங்களைப் பகுத்தறிவாளன் என பலரும் பாராட்ட வேண்டுமென ஆசைப் படுகிறீர்களா... 
வெகு சுலபம்.

இந்து சமயத்தில், சைவ நெறியில் அல்லது தமிழ்ப் பழமொழிகளில் ஏதாவது ஒன்றில் அல்லது எல்லாவற்றிலுமே பரவலாக 
“பிட்டமிரண்டும் பெருவேல் காக்க” என்பது போல 
அல்லது
“பந்திக்கு முந்து படைக்குப் பிந்து” என்ற தமிழ்ப் பழமொழி...

ஏதாவது சொல்லப் பட்டிருக்கும் அதை அப்படியே எழுதி ‘இப்படியும் கடவுளைக் கேட்பதா’ ‘தமிழனை வீரத்தமிழன் என்று விட்டு இப்படி ஒரு தமிழ்ப் பழமொழியா...’
என எழுதிப் பாருங்கள்.

உங்களை சிறந்த பகுத்தறிவாளன் எனச் சொல்லி ஓராயிரம் தமிழர் உங்களது வலைப்பதிவை அல்லது வலைத்தளத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்....
என்னைப் பொறுத்தளவில்,
‘மண்வெட்டிப் பிடியாக இராவிட்டாலும் பரவாயில்லை கோடரிக்காம்பாக இராதே...’ என்பதே எனக்குப் பிடித்தது...
ஒன்றை ஆற அமர இருந்து யோசித்து, ஆராய்ந்து அதன் பின்னர் அதைப் பற்றி எழுதவே எனக்குப் பிடிக்கும்.
இங்கே இவரது வலைப் பதிவை ஏதோ எனது போதா காலம் பார்க்க நேரிட்டது.
இவர் ஸ்கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்து முகமாக,

சேரிள முலைமார் செவ்வேல் காக்க,
நாண் ஆம் கயிற்றை நல் வேல் காக்க,
ஆண் பெண் குறியை அயில் வேல் காக்க,
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க,
வட்டக் குத்தை வடிவேல் காக்க...

என எழுதி, இப்படியாகப் போகிறது வேலைப் பட்டியல் (Job Chart)!
இந்துமதக் கடவுள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது கஷ்டம்தான்!!

என ஏளனமாக நையாண்டி செய்து எழுதியிருக்கிறார்.
இவர் இதை எழுதச் செலவு செய்த நேரத்தில் சிறிது யோசித்திருந்திருந்தால், இதையும் இது போன்ற ஏராளமானவற்றையும் எழுதி தன்னையும் கெடுத்து, தன்னைச் சூழ்ந்தோரையும் கெடுத்திருக்க மாட்டார் எனத் தோன்றுகிறது.
ஒரு குழந்தை, எங்கேயாவது உடல் உறுப்புகளில் ஒரு எறும்பு கடித்து விட்டால், அல்லது அடிபட்டுவிட்டால், “அம்மா... எனக் கதறிக் கொண்டு வந்து தாயிடம் காட்டி மருந்து போட்டுக் கொள்வதில்லையா...”
வட்டக் குதத்தில் ஒரு பரு வந்து விட்டால், உடனே அதை வைத்தியரிடம் காட்டி அதற்கான மருந்து வாங்குவதில்லையா... வைத்தியர்களைக் கடவுள் எனச் சொல்வதுதானே வழமை.
பெற்றோரிடம் சொல்லலாம், வைத்தியரிடம் சொல்லலாம், தாதியிடம் காட்டலாம்.
Two and a half men தொலைக்காட்சி நகைச்சுவை நாடகத் தொடரில், அழகிய இளம் பெண் வைத்தியர் வந்து,
Charlie Sheenஐ “Dropp your pants, I want to check your prostate” என்றதும்
Charlie Sheen “ Yei... prostate exam” என சந்தோஷத்தோடு துள்ளிக் குதிப்பார்.

ஆம்... அழகிய பெண் வைத்தியர்கள், கட்டுமஸ்த்தான ஆண் வைத்தியர்களிடமெல்லாம் எங்களது உடலில் எல்லாப் பாகங்களையும் காட்டி மருந்து வாங்கிக் கொள்வோம். அதிலெல்லாம் சங்கோஜமோ அல்லது தவறோ இல்லை...
ஆனால்,
கடவுளிடம் என்னைக் காத்தருள் எனக் கேட்டுக் கொண்டால் மட்டும் தவறு...
பரிகசிக்க வேண்டியது... கடவுளை பரிதாப நிலைக்குத் தள்ளுவது...

யாரிடம் உடலைக் காட்டுவது என்பது அவரவர் விருப்பம்.
அது சரி, ஸ்கந்த சஷ்டி கவசம் கேட்பதால், சொல்வதால் என்ன நன்மை எனப் பலரும் கேட்கலாம்.
ஒருவர் / ஒருத்தி, கண்ணாடி முன்னால் நின்று காலையிலும் மாலையிலும் தன்னைத் தானே பார்த்து, தனக்குத் தானே,
“நான் அழகாக இருக்கிறேன். நான் ஆரோக்கிமாக இருக்கிறேன், நான் செய்யும் காரியங்கள் எல்லாம் சித்தியடையும்” எனச் சொல்லி வந்தால், 
அவரது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வருவது மட்டுமல்லாமல், அவர் செய்யும் எந்தக் காரியத்துக்கும் மனம் மிகவும் ஒத்துழைக்கும்.

அதனால் எடுத்த காரியங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகச் சித்திக்கும்.
இதை மனோதத்துவம் படித்தவர்களிடம் அல்லது மனோ தத்துவ வைத்தியரிடம் கேட்டால் சொல்லுவார்கள்.
அதுதானே இந்தக் ஸ்கந்த சஷ்டி கவசம்.
எங்களுக்கு நாங்களே சொல்லிக் கொள்கிறோம். கந்தன், முருகன் காப்பாற்றுவான் மனமே கவலை கொள்ளத் தேவையில்லை. என மனதைத் தேற்றிக் கொள்வோமேயானால் அடுத்துச் செய்யப் போகும் காரியத்திற்கு மனம் பூரண ஒத்துழைப்பைத் தரும். செய்யும் காரியமும் சிறப்புற அமையும்.
கவசம் என்றால் என்ன... 
பிற பொருட்கள் எம்மைத் தாக்கி காயப் படுத்தாமல் இருக்க அணியும் ஒரு வன்மையான அணி...
இதுவும் நோய் நொடி எம்மைத் தாக்காமல் காத்துக் கொள்ள உதவும் ஒரு மிக வலிமையான அணி, கவசம்.

தமிழில் “பதறாத காரியம் சிதறாது” என ஒரு பழமொழி உள்ளது.
மனம் அமைதியாக இருந்தால், எடுத்த காரியம் சிறப்புற அமையும். மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும்?
அனைவருக்கும் தெரியும் தியானம் ஆங்கிலத்தில் Meditation ஒரு வழி என.
தியானத்தைப் பற்றி கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார்.
“தியானம் மனதுக்கு அமைதி தரும். நீ ஆஸ்திகனாக இருந்தால், உனக்குப் பிடித்த ஒரு கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு இரு, நீ நாஸ்திகனாக, கடவுளை நம்பாதவனாக இருந்தால், உனக்குப் பிடித்த ஏதாவதொன்றை, ஒரு குரங்கையாவது, நினைத்துக் கொண்டு இரு.” என்றிருக்கிறார் கண்ணதாசன்.
ஆம், இன்னொரு பாடலில் கடவுளை வணங்குவது எப்படி என மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் கண்ணதாசன்.
“... அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை...” என்றிருக்கிறார்.

--- சரஸ்வதி சபதம் என்ற படத்தில், “தெய்வம் இருப்பது எங்கே...” என்றாரம்பிக்கும் பாடல்.
அதாவது மன ஒருமைப்பாடில்லாமல் கடவுளை வணங்கியும் பயனில்லை என்பதாகும்.
சரி,
ஸ்கந்த சஷ்டி கவசம் சொல்வதால், மன ஒருமைப்பாடும் தியானமும் கைகூடுமா...
ஆம்... நிட்சயமாக ஒரு இருபது நிமிடங்கள் நீங்கள் தியானத்தில் இருந்திருப்பீர்கள். மனம் புத்துண்ர்வுடன் விழித்துக்கொள்ளும்.
ஸ்கந்த சஷ்டி கவசம் சொல்லும் போது, 
1. சொற்களை அழகாகவும் அழுத்தம் திருத்தமாகவும் உச்சரிக்க வேண்டும்.
2. இராகத்தோடு சொல்லும்போது, வெகு எளிதில் மனதில்ப் பதிந்து விடும்.
3. ‘ர’க்களும் ‘டு’க்களும் எண்ணிக்கை தவறக் கூடாது.

4. ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

இப்படி வருமிடங்களில் சொற்களின் நிரை தவறக் கூடாது.
இதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் சொல்வீர்களானால் உங்களது மனம் வேறொன்றை நினைக்க நேரமிராது. மேலே சொன்ன வரிகள் ஐந்தாவது பந்தியில் வருகிறது.
இது போல இன்னும் பல இடங்களில் இப்படி வருகிறது.
ஆக, அந்த இருபது நிமிடங்களும் நீங்கள் ஸ்கந்த சஷ்டி கவசத்தையே கூர்ந்து கவனித்து ஸ்கந்த சஷ்டி கவசத்தைச் சொல்ல வேண்டியிருக்கும்.
மனம் Facebokkலோ, Tweeterலோ அல்லது Instergramலோ யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றோ அவர் ஏன் அப்படி எழுதினார், அவர் ஏன் இந்தப் படத்தைப் போட்டு எனது மனதை நோகடித்தாரென என நினைக்க நேரமிராது.
காரணம், ஸ்கந்த சஷ்டி கவசத்தில் அடுத்தடுத்து வரும் சொற்கள் நினைத்து நினைத்து சொல்ல வேண்டிய சொற்கள்.

பல இடங்களில் நா பிரள மறுக்கும். நாவை பிரட்டி உருட்டி தமிழை அழகாக அழுத்தம் திருத்தமாகச் சொல்வதானால், அந்தச் சொற்களை நினைத்து மனதில் இருத்திச் சொல்ல வேண்டும்.
மேலே சொன்னது போல சொல்லிப் பாருங்கள். அதைச் சொல்லி முடித்ததும், அந்த இருபது நிமிடங்களில் வேறு ஏதாவது யோசனை, சிந்தனை அல்லது வேறு ஏதாவது சிறிய ஒலி அந்த நேரத்தில் வந்ததா என யோசித்துப் பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும், அந்த இருபது நிமிடங்ளும் நீங்கள் வேறொன்றை நினைக்கவில்லை, உங்களது கவனம் முழுக்க முழுக்க ஸ்கந்த சஷ்டி கவசத்திலேயே இருந்ததை உணர்வீர்கள்.
அதுதானே தியானம்.
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஸ்கந்த சஷ்டி கவசத்தையே இலங்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இசைக்கும். அதைக் கேட்டுப் பழகியதாலோ என்னவோ அவர்களின் குரலில் ஸகந்த சஷ்டி கவசம், சுப்பிரபாதம் கேட்க எனக்குப் பிடிக்கும்.
அதனால், கீழே தந்திருக்கும் ‘யூற்யூப்’ YouTube இணைப்பில் அவர்கள் பாடிய ஸ்கந்த சஷ்டி கவசத்தை நீங்கள் கேட்கலாம்... குறுவட்டு வாங்கி வைத்திருந்தால் அல்லது தரவிறக்கம் செய்து வைத்திருந்தால், நீங்கள் விரும்பும் நேரத்தில் இசைக்க வசதியாக இருக்கும்.
கண்களை மூடிக் கொண்டு, அவர்களோடு ஒரு முறை சொல்லிப் பாருங்கள்...
இருபது நிமிடத்தின் பின் ஒரு புதுப் பிரகாசத்தை நீங்கள் உணர்வீர்கள். தியானம் செய்தது போல ஒரு புதுத் தெம்பு வந்ததை உணர்வீர்கள்.

காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன் இந்தக் ஸ்கந்த சஷ்டி கவசத்தை சூலமங்கலம் சகோதரிகளோடு ஒரு முறை சொல்லிப்பார்த்துவிட்டு வேலைக்குச் செல்லுங்கள், அன்று உங்களை எல்லோரும் “இன்று நீ அழகாக இருக்கிறாய்” எனச் சொல்லக் கூடும்.
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது தமிழ்ப் பழமொழி, இது நம் முன்னோர் அறியாமல்ச் சொல்லவில்லை.
நீங்கள் எதையாவது நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தால்,
உங்களைப் பார்ப்பவர்கள் கேட்பதில்லையா... “ என்ன பலமான யோசனை” என. அதுபோலத்தான் மனம் அமைதியாக இருந்தால், முகமும் அமைதியாக அழகாக இருக்கும்.

தினமும் இதைச் சொல்லி வந்தால், உடலில் ஏற்படும் இன்னோரன்ன வருத்தங்களை உங்களது மன வலிமையால் வர விடாது தடுத்திட முடியும். 
அது, ஸ்கந்த சஷ்டி கவசத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது.

இவற்றோடு இன்னும் ஒன்றை நீங்கள் உணருவீர்கள்.
அது, தமிழ்
ஒரு நான்கு நாள் அல்லது ஒரு வாரம் இந்தக் ஸ்கந்த சஷ்டி கவசத்தை சொல்லி வந்தீர்களானால், பின்னர் நீங்கள் கதைக்கும்போதோ அல்லது ஒன்றை தமிழில் எழுதும்போதோ தமிழைத் திரிபற உச்சரிப்பீர்கள் எழுதுவீர்கள்.
இதைத்தான் தமிழில் சொல்லி வைத்தார்கள்
“சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்” என.
“ஒரு கல்லில் இரண்டு மாங்காய்” என்பதுதான் பழமொழி.
ஆனால்,
இந்த ஸகந்த சஷ்டி கவசத்தை இந்தக் கவசத்தையே நினைத்து அழகான தமிழில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வர, பல பலன்களை நீங்கள் அடைய வாய்ப்புண்டு.
இந்து சமயத்தவர் மட்டும்தான் இதைக் கேட்டுச் சொல்ல வேண்டுமென்பது அவசியமில்லை. எல்லோருக்கும் இது பொருந்தும்.
என்னுடைய ஒரு கிறிஸ்தவ நண்பர் “முத்தைத் தரு பத்தித் திரு நகை...” என அழகாகப் பாடினார்.
திருப்புகளை நீ படிக்கிறாயா என வியந்தேன். அவர் அதற்குச் சொன்னார்.
“இலங்கை வானோலியில் அருணகிரிநாதர் படப் பாடல் என ஒலிபரப்பினார்கள். அந்தப் பாடலை இயற்றியவரும் அருணகிரிநாதர் என்றார்கள். பாடலைப் பாடப் பாட என்னால் நிறத்த முடியவில்லை. பாடல் முழுவதும் மனப் பாடமாகி விட்டது.” என்றார்.
திருப்புகளை அவர் அழுத்தம் திருத்தமாக உச்சரித்த விதத்தைக் கண்டு மகிழ்ந்தேனே தவிர இவர் திருப்புகளைப் பாடலாமா என்ற கேள்வி எனக்குள் எழவில்லை.
தமிழில் பற்றுள்ள எவரும் தமிழில் இயற்றப் பட்ட எந்த பாடலையோ தேவரம் திருவாசகத்தையோ படிக்கலாம் அதில் தவறில்லை என்பது எனது கருத்து.
K.J.Jesudhas. பிறப்பினால் ஒரு கிறிஸ்தவர் இந்துமத கடவுள் பாடல்களைப் பாடவில்லையா...
ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்,
ஸ்கந்த சஷ்டி கவசத்தை ஏனோ தானோ என, ஏதோ சொல்லி முடித்தால் சரி என சொல்லவதிலும் பார்க்க, இதைச் சொல்லாமல் இருப்பது நல்லது.

நான் இதை எழுத நிறையவே நேரமெடுத்தது. அப்போது, கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் சொன்னது ஞாபகம் வந்தது.
அது,
இல்லை என்பவனுக்கு எதுவும் தேவையில்லை, மாற்றி மாற்றி அது இல்லை, இது இல்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்டு என்பவன், நிறைய ஆராய்ச்சி செய்யவேண்டும், நிறைய யோசிக்கவேண்டும் ஒன்றைச் சொல்வதற்கு என்றிருக்கிறார்.

இறுதியாக,
தம்மைத் தாமே பகுத்தறிவாளர் எனச் சொல்லிக் கொண்டு இந்து சமயத்தையும் சைவ நெறிகளையும் இவற்றோடு தமிழையும இழிவு படுத்துவோரது எழுத்துக்களையோ பேச்சுக்களையோ கருத்தில் கொளளாதீர்கள்.
ஏன் அவரது வலைப்பதிவில் இதை நான் எழுதவில்லை...
நான் அங்கே எனது கருத்தைச் சொன்னால் அவர் அதைப் பிரசுரிக்கப் போவதே இல்லை. விழலுக்கு இறைத்த நீர் போல ஆகும். அதனால்த்தான் நான் அவரது வலைப் பதிவில் இதை எழுதவில்லை.
ஸ்கந்தசஷ்டி கவசம் கேட்பதற்கு இணைப்பு.



இது அவரது வலைப்பதிவு இணைப்பு.

Tuesday 27 December 2016

தத்துவ வரிகள்




வாழும் போது ஊரும் உறவும் மெச்சும் வகையில் வாழ வேண்டும், அப்படி வாழ்ந்தவன் மறைந்தாலும் ஒருவரும் அவனை மறக்க மாட்டார்கள்..., அழகாக இரண்டே வரியில் சொல்லியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்

Wednesday 3 August 2016

படிக்காத மனைவி - பாகம் 9 - உறவு

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).

உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் ‘உறவு’ என்பது பொது. அது எவ்வகையான ‘உறவு’ என்பதில்த்தான் வேறுபாடு...


உறவு.



ஏறத்தாழ, ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டன.

அருளானந்தன், சொல்வி என்ற நோர்வேஜியப் பெண்ணை நோர்வேஜிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதால், அருளானந்தனுக்கு வதிவிட உரிமையை நோர்வேஜிய அரசு கொடுத்திருந்தது.

சொல்வியும் அருளானந்தனும் சொல்வியின் பிறந்த இடமான சார்ப்ஸ்பொர்க் (Sarpsborg)ல் தேவாலயத்தில், சொல்வியின் பெற்றோர், உறவினருடன் சொல்வி, அருளானந்தனினதும் நண்பர்கள் சூழ இருவரதும் திருமணம் இனிதே நிறைவுற்றது.

அருளானந்தனையும் சொல்வியையும் தேனிலவைக் கொண்டாட காதல் நகரம் என அழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸுக்கு சொல்வியின் பெற்றோர் அனுப்பி வைத்ததும் இங்கே சொல்ல வேண்டியது.

இருவரும் சுவீடனில் கல்வியை முடித்துக் கொண்டு, ஒஸ்லோவில் பொறியியல்த் துறையில் இருவரும் வேலையும் பெற்றுக் கொண்டனர்.

ஆனால்,

அருளானந்தன் எதுவுமே தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. இது சொல்வியைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. இலங்கையின் நிலை கட்டுக்கடங்காமல் வளர்ந்து கொண்டே சென்றது. சொல்வியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை, எப்போதும் வெடித்து நெருப்பைக் கக்கலாம் என மலையடிவரத்தில் இருப்போர் தவிப்பது போல, சொல்வியும் தவித்துக்கொண்டிருந்தாள்.

இருந்தும்,

ஒரு மன ஆறுதல் சொல்விக்கு இருந்தது. அது அருளானந்தனின் தங்கை மதிமலர். வேறொருவரும் இந்தியாவிலிருந்து சொல்வியோடு கதைப்பதில்லை. மதிமலரும் சொல்வியும் தொலைபேசித் தோழிகள் ஆனார்கள்.
ஒவ்வொரு முறையும் சொல்வி மதிமலருடன் கதைக்கும்போது, தானும் அருளானந்தனும் திருமணம் செய்திருப்பதை சொல்லக் கூடாது என மிகக் கவனமாக இருந்தாள்.  அது அருளானந்தனின் அன்பான வேண்டுகோள்.

முதலிலெல்லாம், மதிமலர், சொல்விக்கு நன்றி சொல்லுவாள். அருளானந்தனின் மனதை மாற்றி நோர்வேயிலேயே தங்க வைத்ததற்காக. அப்போதெல்லாம் சொல்வி உணமையை மறைப்பதை நினைத்து தவியாகத் தவித்தாள்.

ஏற்கனவே சுவீடனில் படிக்கும்போது, செலவைக் குறைப்பதற்காக தொலைபேசியை சொல்வியுடன் பகிர்ந்து கொள்வதாகச் சொல்லியிருந்ததால், அருளானந்தனின் பெற்றோர், தங்கை மதிமலர், தம்பி சிவானந்தன் எவருமே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் குடியிருப்பதாக எண்ணவில்லை.

ஒவ்வொரு சனிமாலையும் சொல்வி, மதிமலருக்கு தொலைபேசியில் அழைத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது உரையாடுவாள். அது சொல்விக்கு மன ஆறுதலைக் கொடுக்கிறது என்பதால், அருளானந்தனும் அதை தடுக்கவில்லை.
பலவேளைகளில், அருளானந்தனின் மடியில் படுத்திருந்தவாறே சொல்வி மதிமலருடன் கதைத்துக் கொண்டிருப்பாள்.
அந்த நேரமெல்லாம் அருளானந்தன் மிகுந்த சிரமத்தோடு தனது கைகளைக் கட்டிக் கொண்டிருப்பான்.

ஒரு சனிக்கிழமை,சொல்வியும் மதிமலரும் ஊர் வம்பு, உலக வம்பு காதல், திருமணம் என சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்க, சொல்வியை அணைத்த படி அருளானந்தன் தொலைக் காட்சியின் ஒலியை நிறுத்தி விட்டு தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடையே சொல்வியை நுள்ளியும் கிள்ளியும் சிலுமிசம் செய்து கொண்டிருந்தான். திடீரென

“ Is my brother there...? (அண்ணா இருக்கிறானா...?)” எனக் கேட்டாள் மதிமலர்.

“Yes... Do you want to talk to him (ம்...ம்... இருக்கிறான். கதைக்கப்போறியா?)” என சொல்வி கேட்டுவிட்டு, தொலைபேசியை அருளானந்தனிடம் தந்தாள்.

அப்போது மதிமலர்,
“I don't know what to talk to him... we talk... (அவனோட என்னத்தைக் கதைக்கிறது... நாங்க கதைப்பம்...)”  என்றாள் மதிமலர் மறுமுனையிலிருந்து, தொலைபேசியின் ஒலி வாங்கி கை மாறியது அறியாமல்.

“அடியே...ய்... சொந்த அண்ணனோட கதைக்கிறதுக்கு ஒண்டுமில்லையோ... உன்னை என்ன செய்யிறன் பார்...” என்றான் அருளானந்தன் தமிழில். சொல்விக்கும் அது விளங்க அவளும் சிரித்தாள். மறுமுனையில் மதிமலரும் சிரித்தாள்.

“டேய் முட்டாள் அண்ணா, உன்னோட நான் கதைக்கிறேல்லையாடா... இது செல்வி எனக்கு, என்னோட கதைக்கிறதுக்கெண்டு எடுத்தது... அதாலதான் சொன்னன் அந்த முட்டாளோட நான் என்னத்தைக் கதைக்கிறதெண்டு... ” எனச் சொல்லிச் சிரித்த மதிமலர் தொடர்ந்து.

“அண்ணா... எனக்கு எவ்வளவு பெருமையாக் கிடக்கு எனக்கு ஒரு Norwegian friend இருக்கு அவ ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னோட கதைக்கிறதுக்காக எனக்கு telephone எடுக்கிறது எண்டு சொல்லேக்க... என்ர school friends எல்லாருக்கும் பொறாமை. நான் சொல்லுவன், என்ர அண்ணாவோட நோர்வேயில படிச்சுட்டு அண்ணாவோடையே வேலை செய்யுது அதால அண்ணா எனக்கு அவவை introduce (அறிமுகம்) செய்து வைச்சவன். செல்விக்கு எங்கட cultureல சரியான விருப்பம் அதால என்னோட கதைக்கிறது எண்டு சொல்லேக்க எவ்வளவு பெருமையாயிருக்கு தெரியுமே...
சொல்வி அருளானந்தனோடு அணைந்து இருந்ததால், மதிமலர் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அடியேய் நான் சொல்வியோட கதைக்கக் கூடாது எண்டு சொன்னனானே... நீ என்னோட கதைக்க ஒண்டுமில்லை எண்டு சொன்னாய் அதுதான் நான் கேட்டனான்.” என்ற அருளானந்தன், தொடர்ந்து,

“சொல்வியின்ர படம் பாத்தனியே...?” என அருளானந்தன் கேட்டபோது, சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள்.

“ஒ... நீ labல எடுத்த ஒரு group photo அனுப்பியிருந்தனி அதில யார் ஹன்னா, யார் சொல்வி எண்டு எழுதியிருந்தனி பாத்தனான். நான் அந்தப் படம் வைச்சிருக்கிறன்.” என்றவள் தொடர்ந்து,

“ஹன்னா எங்க அண்ணா...?” என்றாள் மதிமலர்.

அருளானந்தன் சொல்வியைத் திரும்பிப் பார்த்து,

“ஹன்னா எங்கே இருக்கிறாள்...?” என சொல்வியிடம் கேட்டான் நோர்வேஜிய மொழியில்.

“She got a job in Tromsø in North Norway. She lives there now... (அவளுக்கு வட நோர்வேயில துரும்ஸோ எண்ட இடத்தில வேலை கிடைச்சிருக்கு. அவள் இப்ப அங்கயே இருக்கிறாள்) என ஆங்கிலத்தில் சொன்னாள் சொல்வி.

“கேட்டுதே உனக்கு சொல்வி சொன்னது...” எனக் கேட்டான் அருளானந்தன் மதிமலரை...

“ஓமோம்... கேட்டுது... அவ இப்ப நோத் நோர்வேயில இருக்கிறாவே...” என்றாள் மதிமலர்.

“அது சரி சொல்வியைப் படத்தில பாத்தனிதானே... எப்பிடி... வடிவே...?” எனக் கேட்டு விட்டு சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.

சொல்விக்கு அருளானந்தன் தமிழில் மதிமலரைக் கேட்டது துல்லியமாக விளங்கியது... அருளானந்தனை முறைத்துப் பார்த்து, அருளானந்தனின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினாள்.

“அண்ணா She is gorgeous I am jealous of her beauty... And she is so sweet அண்ணா... so soft...( அவள் மிக அழகனவள்... எனக்கு பொறாமையாயிருக்கு அவளின்ர அழகில... அதோட நல்ல இனிமையானவள்... மிகவும் மென்மையானவள்...)” என்றாள் மதிமலர்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சொல்வியின் முகம் குங்குமம் போலச் சிவந்தது. நாணத்தால் தலை குனிந்து கொண்டாள்.
அருளானந்தன் மிக மென்மையாக சொல்வியை மறு கையால் அணைத்து  சொல்வியின் தலையில் முத்தமிட்டுவிட்டு,

“ஹேய்... நான் அவளை கலியாணங் கட்டடே...” என்றான் அருளானந்தன் இரகசியமாக.

“ஏனடா நீ ரகசிமா கதைக்கிறாய்...?” எனக் கேட்டாள் மதிமலர்.

“அடியேய் சொல்வி, பாத்றூம் (bathroom) போயிருக்கிறாள்... அவளுக்குக் கேட்டா என்ன நினைப்பாள்...?” எனச் சொன்னதும்
சொல்வி, அருளானந்தனை திரும்பவும் முறைத்தாள். அருளானந்தன் மெல்லக் கண்ணடித்தான் சொல்வியைப் பார்த்து...

“ஹா...ய்... எனக்கொரு நோர்வேஜியன் அண்ணி வரப்போறா...” என மதிமலர் ஆரவாரப்பட்டு கத்துவது தொலைபேசியில் துல்லியமாகக் கேட்டது இருவருக்கும். சொல்விக்கு மிக ஆறுதலாக இருந்தது.

“அடியேய் ஏனடி இந்தியா முழுதையும் இப்ப எழுப்புறாய்...” என்றான்

“வீட்டில ஒருத்தரும் இல்லையடா... ” என்றவள் தொடர்ந்து,

“ அண்ணா...! அம்மா இஞ்ச ஒரு பொம்பிளையப் பாத்திருக்கிறா... உன்னோட கதைக்கவேணும் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறா... எல்லாம் இஞ்ச முடிவான பிறகு உன்னக் கூப்பிட்டு கலியாணம் கட்டி அனுப்புவம் எண்டிருக்கிறா...
இப்பவும் அவயளட்டத்தான் அம்மாவும் அப்பாவும் போயிருக்கினம்...” என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள் மதிமலர்.

அருளானந்தன் சொல்வியைப் பாராது,

“சரி சரி நிறைய நேரம் கதைச்சிட்டம் telephoneக்கு காசேறப்போகுது... பிறகு கதைப்பம்... ” என அவசரமாகத் தொலைபேசியைத் துண்டித்தான்.

சொல்வி தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சொல்விக்கு மதிமலர் சொன்னதோ அல்லது கடுகதியில் தமிழில் அருளானந்தன் கதைத்ததோ விளங்கவில்லை. ஆனால், அருளானந்தன் தொலைபேசியை துண்டித்த விதம் அவளுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.

அருளானந்தனைப் பார்வையால் அளந்துவிட்டு மெல்ல அவனது மார்பில் சுகமாக சாய்ந்தாள். அருளானந்தனும் இரு கைகளாலும் அவளை அணைத்துக் கொண்டான்.


தொடரும்...

Monday 18 April 2016

Wednesday 6 April 2016

படிக்காத மனைவி - பாகம் 8 ஓ...! உன்ர விருந்தாளி வந்துட்டாரா...?

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


திருமணம் என்றால், உலகிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரு இனம் புரியாத உன்னதமான உணர்வலை உடலை ஆட்கொள்ளும்.


ஓ...! உன்ர ‘விருந்தாளி’ வந்துட்டாரா...?


“I also wanted to talk with someone there... When you agree, I couldn't hold my feelings inside... (நானும் யாராவது அங்க ஒருவரோட கதைக்கவேணும் எண்டு இருந்தனான்... நீ ஓம் எண்டவுடனே என்னை நான் கட்டுப் படுத்தேலாமப் போச்சு...)” என்றாள் சொல்வி இப்போதும் தழுதழுக்கும் குரலுடன்...

சொல்விக்கு, அருளானந்தனின் தங்கையோடு கதைக்கப் போகிறோம்... அவள் தன்னை ஏற்றுக் கொள்ளவாளா... என்ற அச்சமும் அதே நேரம், ஆனந்தப் பரவசமுமே அவளுக்கு அழுகையைக் கொண்டு வந்தது.

சொல்வி, சோபாவிலேயே (Sofa) அருளானந்தனின் குளிர்ப் போர்வையால் போர்த்தபடி உறங்கிவிட்டாள். 
அருளானந்தன் அன்றே மாலை ஏழு மணியளவில் வீடு வந்ததும், சொல்வியைப் பார்த்தான். சொல்வி ஒரு குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள்.

‘இவளுக்கு என்ன நடந்தது, எனது போர்வை எனது சாரத்தை தனக்கு மேலே போர்த்திப் படுத்திருக்கிறாள்... ஏழு மணிக்கெல்லாம் இவ்வளவு நித்திரையா...’ என தனக்குள் கேட்டுக் கொண்ட அருளானந்தன், உடை மாற்றி இரு குவளைகள் நிரம்பிய கோப்பியோடு வந்து, சொல்விக்கருகில் அமர்ந்தான்.

அப்போது கண் விழித்த சொல்வி,

“எனக்கு இப்ப ஏலாது அருள்... கொஞ்ச நேரம் நித்திரை கொள்ள விடு...” என கொஞ்சும் குரலில் சொல்லிவிட்டு, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்த பின் அருளானந்தனின் போர்வையை இழுத்து நுகர்ந்து பார்த்து,

“Oh... your smell is sooo good, My sweet Asian Hercules...(ஓ... உனது வாசம் நல்லாயிருக்கு, என்ர ஆசிய ஹேர்க்குலீஸ்... )”  என நித்திரையில் சொல்லிக் கொண்டும், அவனது போர்வையால் உடலை இறுக்கமாகப் போர்த்திக் கொண்டும், அவனது தலையணையை மார்போடு அணைத்துக் கொண்டும், திரும்பிப் படுத்து நித்திரையிலாழ்ந்தாள் சொல்வி.

அவளது செய்கையைப் பார்த்து இரசித்து தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தான் அருளானந்தன்.

தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி, சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அருளானந்தன் இடையிடையே சொல்வியையும் பார்த்தான். அவள் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்.

“ I am so sorry Sølvi...( என்னை மன்னிச்சுடு சொல்வி...) உன்னை நினைக்கவே நேரமில்லாமல்ப் போயிட்டுது... நீ பக்கத்தில இருந்தும் உன்னைப் பாக்கம இருந்துட்டன்...” 
என மிக தாழ்ந்த குரலில் சொல்லிய அருளானந்தன்
“ stupid... stupid... STUPID me... (முட்டாள்... முட்டாள்... நானொரு முட்டாள்...)” என சிறிது சத்தமாகவே சொன்னான்.

அப்போது,

“ம்... ம்... ம்... என்ன...” என சொல்வி தலையை அசைக்காமல், கண்களைத் திறக்காமல்க் கேட்டாள்.

“ஒண்டுமில்லை... நித்திரை கொள்... நாங்கள் நாளைக்குக் கதைப்பம்...” எனச் சொல்லிக் கொண்டு, அவளது போர்வையைக் கழுத்து வரை இழுத்துப் போர்த்தியவன், ஆசையோடு கன்னத்தில் ஒரு முத்தமிட எத்தனித்து, பாதியில் நிறுத்திக் கொண்டான் அருளானந்தன்.
‘அவளை இப்ப கொஞ்சி அவளின்ர நித்திரையைக் குழப்ப வேண்டாம்...’ என மனதுக்குள் எண்ணியவனாக, சற்று நேரம் சொல்வி நித்திரை செய்யும் அழகையே பார்த்த வண்ணம் இருந்தான் அருளானந்தான்.

‘ My  Sweet sweet angel...(என்ர இனிய அன்புத்தேவதை...)’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு எழுந்தான்.

‘பசிக்குது... ஏதாவது செய்து வச்சிருக்கிறாளா பாப்பம்...’ எனத் தனக்குள் தமிழில்ச் சொல்லிக் கொண்டே அடுக்களைக்கு வந்தான் அருளானந்தன்.

ஆனால்,

அங்கே எதுவித உணவும் சமைக்கதாதிருந்தது கண்டு திகைத்துப் போய்,

‘இவள் இண்டைக்கு சாப்பிடவே இல்லையா... ’ என தனக்குள் கேட்டுக் கொண்டு பாணை எடுத்து துண்டங்களாக வெட்டி, அதன் மேல் சதுரச் சீவல்களாக வெட்டிய பாலாடைக்கட்டிகளை (Sliced Cheese) வைத்து சூழையில் வைத்து அது சூடாகி பாலாடைக் கட்டிகள் பாண் துண்டங்கள் மேல் உருகும் வரை காத்திருந்தான் அருளானந்தன்.

அப்போது, 

நித்திரையிலிருந்து கண் விழித்த சொல்வி எதிர்க் கதிரையில் அருளானந்தனின் பயணப் பையும் கால்ச்சட்டை(trousers), உட்கால்ச்சட்டை(Boxer shorts), மேலங்கி (Shirt), குளிர் மேலங்கி(Sweater) எல்லாம் இரைந்து கிடந்ததைப் பார்த்தாள். 
அருளானந்தன் வீட்டில் இருக்கும்போது, சாரமும் ஒரு மேலங்கியும் அணிவான். நித்திரை செய்யும்போது, மேலங்கியும் அணிவதில்லை. முதல்நாள் சுவீடனில் அருளானந்தனை இந்தச் சாரத்தோடு பார்த்தபோது, சொல்வி சிரித்தாள்.

“என்ன சிரிக்கிறாய்... இதுதான் எங்கட வீட்டு உடுப்பு...” என்றான் அருளானந்தன்.

“இல்ல... இதுமாதிரி இங்க நாங்கள் கோடை காலத்தில உடுத்துவம்... இது பெண்களின்ர உடுப்பு, ஆனா... நீ கட்டியிருக்கிற மாதிரி உருளை வடிவா இருக்காது... ஒரு நீளத் துண்டை ஒரு தரம் சுத்தி இடுப்பில ஒரு ஊசி குத்துவம்... அதுபோல இருந்ததால சிரிச்சன்” என்றாள்.

“ஓ... நானும் கண்டிருக்கிறன்... அப்பிடியும் ஒரு உடுப்பு அங்க ஆம்பிளயள் உடுத்துறவயள்... அதுக்குப் பேர் ‘லுங்கி’; இதுக்குப் பேர் ‘சாரம்’ ” என விளக்கினான் அருளானந்தன்.

“இனி நான் கோடைகாலத்தில உன்ர ‘சறங்’ கட்டலாம்...” என்றாள் மிகுந்த ஆசையுடன் சொல்வி.

“அது ‘சறங்’ இல்லை... சரம். ச - ர - ம். ” எனச் சொல்வியைத்திருத்தினான்.

சொல்வியும் அப்படியே சொல்லிப்பார்த்தாள்
“ச - ர - ம்...” 
சொல்வி தமிழ் சொல்லும் அழகைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தான் அருளானந்தன்.

“ச - ர - ம்... சறம்” எனச் சொல்வி சொன்ன போது, அருளானந்தன் சிரித்தான். 
“என்ன அருள்... சரியாத்தானே சொல்றன் ” என சொலவி, குழந்தை போல சொன்னாள்.

“பறவாயில்லை... இப்போதைக்கு ஏற்றுக் கொள்ளலாம்” என்றவன் தொடர்ந்து,

“நீ... தாராளம கட்டு... நான் தேவையெண்டா இதை வெட்டி ஒரு நீளத் துணியா தைச்சுத் தாறன் இங்க பெம்பிளயள் கட்டுற மாதிரி...” என அருளாந்தன் சொல்ல இடை மறித்த சொல்வி,

“இல்ல... இல்ல... வேண்டாம்... வேண்டாம்...” என்றாள்

“ஏன்...” என சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.

“இல்ல... இங்க பெம்பிளயள் கட்டுறது காத்தடிச்சா... இடுப்பு வரையும் திறக்கும். இப்பிடியே இருந்தா நல்லது...” எனச் சொல்லி நாணத்துடன் அருளானந்தனைப் பார்த்தாள் சொல்வி.

“அதுதானே எங்களுக்கு வேணும்...” என்று சொல்லி சொல்வியைப் பார்த்துக் கண்ணடித்தான் அருளானந்தன்.

“ஹேய்... உன்னை... ” எனச் சொல்லிக் கொண்டு வந்த சொல்வி அருளானந்தனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு,

“நீ... அப்பிடி ஒருத்தியையும் பாக்கக் கூடாது... இது என்ர ஆணை...” என்றாள் சொல்வி அருளானந்தனை இறுகக் கட்டிப் பிடித்தபடி.

“இது முடியாத விசயம்...” என அருளானந்தன் தொடரமுன்.

“ஏன்...” என ஆச்சரியத்துடன் அருளானந்தனைப் பார்த்தாள் சொல்வி.

“இப்ப... றோட்டில போகேக்க ஒருத்தியின்ர ‘லுங்கி’ காத்தில பறந்தா நான் என்ன கண்ணை மூடிக் கொள்ளட்டே...” எனக் கேட்டுச் செல்லமாக சொல்வியின் கன்னத்தில் கிள்ளினான் அருளானந்தன்.

“ஓ... அப்படிக் கண்ணை மூடவேணும்” என சிறு பிள்ளைக் குரலில் செல்லமாகச் சொன்னாள்.

“ஹேஹே...ய்...  நீ என்ன சொல்லுறாய்...” என சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.
சொல்வி சிரித்தாள்.

“உன்னை என்ன செய்யிறன் பார்...” எனச் சொல்லி, சொல்வியை இழுத்து இறுக அணைத்து ஆழமாக முத்தமிட்டான்.

சிந்தனையில் இருந்து மீண்ட சொல்வி,

‘ச்சீ... என்ன மடைத்தனம்... ஒரு நல்லவரைப் போய் அனாவசியமா சந்தேகப் பட்டுட்டன்... ’ எனத் தனுக்குள் சொல்லிக் கொண்டாள்.

‘ஹேய்... அருள் வந்திட்டான்’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டே துள்ளியெழுந்து  படுக்கையறைக்கு ஓடினாள்... அங்கே பார்த்து ஏமாற்றத்துடன்,

‘எங்க இவன் ஒழிச்சிருக்கிறான்...’ எனச் சொல்லிக் கொண்டு, அடுக்களையை எட்டிப் பார்த்தாள் சொல்வி.
அங்கே அருளானந்தன் சூழையிலிருந்து பாண் துண்டுகளை எடுத்துக் கொண்டிருந்தான்.

ஓடிச்சென்று அருளானந்தனைப் பின்னாலிருந்து இறுகக் கட்டிப்பிடித்து, கழுத்தில் முத்தமிட்டாள்.

“ஹேய்... நீ எழும்பியிட்டியா...” எனச் சொல்லிக் கொண்டே திரும்பியவன், சொல்வியை அப்படியே கட்டியணைத்து ஆழமாக அவசரமாக முத்தமிட்டான்.

“Arul I love you... I love you... I love you sooo much...(அருள்... நான் உன்னை நேசிக்கிறன்... நான் உன்னை ஆழமா நேசிக்கிறன்...)” என்றாள்.

“ஹேய்... என்ன நடந்தது... I love you my sweet angel...” எனச் சொல்லி மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தவன்,

“ஹேய் யார் அந்த Asian Hercules... (ஏசியன் ஹேர்க்குலீஸ்...)? என அவளை அணைத்தபடி கேட்டான்.

“ஐயோ... ” என்றவள்,
“என்ன... யார்... எனக்கொண்டும் விளங்கேல்லை...” என அருளானந்தனின் அணைப்பில் இருந்தபடியே அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள்.

“நித்திரேலதான் உண்மை வரும் எண்டு சொல்லுவாங்கள்...” என்றான்.
திரும்பவும் சொல்வி,

“ஐயோ...” என்றவாறே அருளானந்தனின் மார்பில் முகம் புதைத்தபடி,
“நான் சொல்லமாட்டன்...” என்றாள் செல்லமாக.

அருளானந்தன் அவளது முதுகைத் தடவியபடி,
“எனக்குக் கனவில வாறது யார் தெரியுமே... xena warrior princess...” என்றான்

அவனது மார்பிலிருந்து தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்த சொல்வி,
“என்னைக் கனவில காணுறேல்லையா...” என்றாள் மிகுந்த ஏக்கத்துடன்.

“ஹேய்... உன்னைத்தானே நேரில பாத்து கட்டிப் பிடிச்சு கொஞ்சுறன்... அவள் ‘ஒரு கற்பனை’... நீ நிஜம்...” என்றவன்.

“உன்ர ஏசியன் ஹேர்க்குலீஸ் யாரெண்டும் எனக்குத் தெரியும்...” என்றான்.
அப்போது, அவனது மார்பில் தலை சாய்த்து சுகம் கண்ட சொல்வி, தலையை நிமிர்த்தாமலே,
“யார்...” என்றாள்.

“ரகுதானே...” என்றவன் குறும்புடன் சிரித்தான். சொல்வியோ அவனைப் பார்க்காமல்,

“ம்...ம்...ம் அந்தக் கழுதையைத்தான் நான் கனவு காணுறன்... ” எனச் சொல்லும் போதே அவளது குரல் தழுதழுத்தது.

அருளானந்தன் அந்த நிலையை மாற்ற எண்ணி,

“ஏய்... எனக்குப் பசிக்குது வா... ரெண்டுபேரும் சாப்பிட்டுக் கொண்டே கதைப்பம்...” எனச் சொல்லிக் கொண்டே பாண்துண்டங்கள் அடுக்கிய கோப்பையோடு அவன் திரும்ப, சொல்வி ஒரே பாய்ச்சலில் அவன் மீது ஏறிக்கொண்டாள். அவனும் அவளை ‘உப்பு மூட்டை’ காவியபடி கூடத்துக்கு நடந்தான்.

“ ‘ஒஸ்லோ ட்ரிப்’ (Oslo trip) எப்பிடியிருந்துது... ” என ஆவலோடு சொல்வி.

பாண் துண்டைக் கடித்த அருளானந்தன் அதை மென்று விழுங்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சொல்வி. பின்னர்,

“நான் ஒஸ்லோவுக்குப் போகேல்ல... ” என்றான் அருளானந்தன்.

“அப்ப இந்த ரெண்டு நாளும் ஏன் வீட்டுக்கு வரேல்ல...” என அங்கலாய்ப்புடன் கேட்டாள் சொல்வி.

“இனியும் மறைக்கேலாது... உண்மையைச் சொல்றன்... நான் உனக்குத் தெரியாம இன்னொருத்திய வச்சிருக்கிறன். அவளும் ‘ஸ்டொக்கோம்’ (Stockholm) இலதான் இருக்கிறாள். அவளின்ர வீட்டில நிண்டனான்.” எனச் சொல்லி சொல்வியைப் பார்த்தான்.

“உண்மையாத்தான் சொல்றியா அருள்...” என்றவளின் குரல் தழுதழுத்தது. கண்களில் நீர் நிறைந்தது.

“ஹே...ய்... ஏன் அழுறாய்... உனக்குத் தெரியும்தானே நான் வீம்புக்கு கதைக்கிறது...” என அவளை இழுத்து அணைத்தான் அருளானந்தன்.

சொல்வியோ அவன் மார்பில் முகம் புதைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.
அவளது அழுகையை நிறுத்த அரும் பாடுபட்டான் அருளானந்தன். ஒருவாறு அழுவதை நிறுத்திய சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள். அவன் அவளை அணைத்து முத்தங் கொடுத்து,

“முந்தி உப்பிடிச் சொன்னா... எனக்கு அடிச்சுப் போட்டு, சொல்லடா... பொய்தானே... சொல்லடா பொய்தானே எண்ணுவாய்... இண்டைக்கு ஏன் அழுறாய்..” என அவளை ஆதரவாக அவளது முதுகில் தடவிபடி அருளானந்தன் கேட்டான்.

“இண்டைக்கு அப்பிடிப் பகிடியள் என்னால தாங்கேலாது...” என்றவள் தொடர்ந்து,
“அப்ப, இந்த ரெண்டு நாளும் ஏன் இங்க வரேல்ல... நீ...” எனத் திரும்பவும் கேட்டாள்.

“என்ன ரெண்டு நாள், ரெண்டு நாள் எண்டு கொண்டிருக்கிறாய்... நான் இண்டைக்கு காலம போனனான் இரவு வந்திருக்கிறன்... பஸ்ஸுக்கு நாலு மணித்தியாலம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு... ” எனச் சொல்லி அவனது மார்பில் முகம் வைத்துப் படுத்திருந்த சொல்வியின் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்துத் நிமிர்த்தி,

“ஹேய்... என்ன நடந்தது...” என்றான்.

“நீ புதன்கிழமை போனனி... இண்ண்டைக்கு வெள்ள்ள்ளிக்கிழமை...” என இழுத்தபடி அருளானந்தனைப் பார்த்தாள்.
“நீ ஏதோ கனவு கண்டு எழும்பியிருக்கிறாய் போல கிடக்கு...” எனச் சொல்லிக் கொண்டே, தொலையியக்கியால் (remote control) தொலைக்காட்சியை இயக்கி அதில் செய்திகள் அடங்கிய எழுத்துப் பக்கத்தை வருவித்தான்.
அதில் புதன்கிழமை மாலை எட்டு மணி என வலது மேல் மூலையில் எழுதப் பட்டிருந்தது.

அதைப் பார்த்த சொல்வி, 

“என்னை மன்னிச்சிடு அருள்... எனக்கெல்லாமே குழப்பமாயிருக்கு அருள்...” என கலங்கிய கண்களோடு அருளானந்தனைப் பார்த்தாள்.

“நிறைய நேரம் நித்திரை கொண்டுட்டு எழும்பினா... உப்பிடித்தான் குழப்பமாயிருக்கும்... இந்தா சாப்பிடு... பிறகு எல்லாம் கதைப்பம்” என பாண் துண்டை அவளது வாயில் வைத்து ஊட்டினான் அருளானந்தன்.

“அது சரி... ஏன் ஒஸ்லோவுக்கு நீ போகேல்ல...” எனக் கேட்டு அருளானந்தனைப்பார்த்தாள்.
அருளானந்தன் வாயுள் இருந்த பாண் துண்டை மென்று விழுங்கிய பின்,

“ ‘கார்’ வழுக்கி ‘றோட்’டை விட்டுப் போயிட்டுது... அதால, ரகு ‘ப்ளைட்’ (flight)ல ஒஸ்லோவுக்குப் போறான்... நான் திரும்பி வந்திட்டன்... ” என அமைதியாகச் சொன்னான்.

“ஐயய்யோ... அருள்... உனக்கொண்டும் நடக்கேல்லைத்தானே... உண்மையைச் சொல்லு... நாங்க ஒரு ‘டொக்டர’ட்ட -doctor- போவம் ‘செக்’ (check) பண்ணுவம்...” என அவனது முகத்தை இரு கைகளாலும் வருடியபடி அவசரமாகச் சொன்னாள்  சொல்வி.

“Relax... (பதட்டப்படாத...) எனக்கொண்டும் இல்லை ...” 

“ ‘கார்’ அடிபடேல்லே... வழுக்கி வெளியில போகேக்க கல்லொண்டில இடிச்சிருக்க வேணும் ‘றேடியேற்றர்’ (radiator) ஓட்டையாயிட்டுது... அதால கார் ஓடேலாது... அவன் ஒஸ்லோவுக்கு அவசரமா போக வேணும் பிறகு வந்து பாப்பம் எண்டுட்டு போறன். நான் என்ர sweet angelலட்ட ஓடி  வந்திட்டன்.” எனச் சொல்லி சொல்வி அணைத்து உச்சியில் முத்தங்கொடுத்தான்.

“ஹேய் வாறியா... படுக்கைக்கு... உன்னோட நிறைய கதைக்க இருக்கு...” என அருளானந்தன் கேட்டான்.

அருளானந்தன் அழைத்ததன் பொருள் சொல்விக்கு விளங்காமலில்லை. அவளுக்கும் அந்தக் காதல் இன்பம் வேண்டும் எனத் தவமிருக்கிறாளே வாரக்கணக்கில். ஆனால்,

“ஏன்... இங்க யாருமில்லையே... இங்கயே இருந்து கதைக்கலாம்... ” என்றவள் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு,

“ஓ... அவையளா... அவையள இப்பிடி இந்த பட்டனை (button) அமுக்கினா... அவையள் போயிடுவினம்...” எனத் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த இருவரையும் பார்த்து சொன்ன சொல்வி, தொலையியக்கியால் (remote control) தொலைக்காட்சியை நூர்த்தாள்.

சொல்வி செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் அருளானந்தன். அப்போது, சொல்வி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“எனக்கே நடிக்கிறியாடி... எனக்கே நடிக்கிறியாடி...” எனத் தமிழில்ச் சொல்லிக் கொண்டு சொல்வியை இறுக அணைத்துக் குலுக்கினான். சொல்வியும் சிரித்துக் கொண்டு குழந்தைகள் போல,

“ம்... ம்... ம்...” என்றாள். அவளது ‘ம்’ காரம் நடுங்கிய குரலில் ஒலித்தது. சொல்வி நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்தாள். அவனும் குனிந்து அவளது ரோஜா வர்ண உதடுகளில் மென்மையான ஒரு முத்தம் கொடுத்து மிக இரகசியமான குரலில்,

“எனக்கு ‘செக்ஸ்’ (sex) வேணும்...” என்றான் சொல்வியின் காதருகில்.

“அது இண்டைக்கு முடியாது...” எனச் சொல்லிச் சிரித்தாள் சொல்வி.

“Oh... has your guest arrived...? (ஓ... உன்ர விருந்தாளி வந்துட்டாரா...?)” எனச் சொல்லி சொல்வியை அணைத்து, அவளது பொன்னிறக் கேசங்கள் கலைந்தோடிக்கிடந்த அவளது தலையில் முத்தமிட்டான் அருளானந்தன்.

சொல்வி, அருளானந்தனை நிமிர்ந்து பார்த்தாள். அருளானந்தன் சொல்வியை இன்னும் இறுக அணைத்து, 

“ஹேய்... என்ன ஒரு மாதிரியாய் இருக்கிறாய்...” எனக் கேட்டான்.

“இல்ல... நீ ஏமாந்திட்டியோ எண்டு நினைக்கேக்க எனக்கு தாங்க முடியேல்ல...” எனச் சொல்லும்போதே அவளது குரல் தழுதழுத்தது.

“இது, வழமையா நடக்கிறதுதானே... நான் ஆசையா வந்து உன்னைக் கட்டிப் பிடிச்சா... நீ உடனே ‘STOP sign’ காட்டுறது...” எனச் சிரித்தபடி சொன்ன அருளானந்தன் தொடர்ந்து,

“என்னை மன்னிச்சுடு சொல்வி, இந்த ஒரு மாசமும் நான் ஏதோ பித்துப் பிடிச்சு அலைஞ்சு உன்னையும் கஷ்டப்படுத்தியிட்டன்...” எனச் சொல்லி, அவளது தலைக்குமேல் தனது கன்னத்தை வைத்து, அவளை தனது கைகளால் கட்டிப் பிடித்து, ஒரு குழந்தையைத் தாலாட்டுவது போல மென்மையாக இரு புறமும் அசைத்தான்.

மெல்ல சொல்வி அவனது கைகளை விடுவித்து, எழுந்து இருந்து கொண்டு,

“எனக்கும் தெரியும் அருள் ‘சிலோன்’ (Ceylon)ல என்ன நடக்குதெண்டு... ஆனா... உனக்கு எப்பிடி ஆறுதல் சொல்றதெண்டு தெரியாமல் இருந்தனான்...” என மிக ஆதரவாகச் சொல்லி சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள். அவனோ ஒளி இல்லாத தொலைக் காட்சிப் பெட்டியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் சொல்வி அருளானந்தனை  இரு கைகளாலும் வளைத்து இறுக அணைத்தபடி அவனது தோழில் தலை சாய்த்தாள். ஒரு சில நிமிடங்கள் அவர்களிருவரும் எதுவுமே கதைக்கவில்லை.

சொல்வி மெல்ல நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்தாள். அவன் இன்னும் அந்தத் தொலைக் காட்சிப் பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மீண்டும் அவனது தோழில் தலை சாய, அவன் தனது கையால் அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

“அருள் என்னைக் கலியாணங் கட்டுறியா...” என மிக மென்மையாகக் கேட்டாள் சொல்வி.

ஏதேதோ சிந்தனையில் மூழ்கியிருந்த அருளானந்தனுக்கு சொல்வியின் குரல்; தொலைவில் ஒலிப்பது போல இருந்தது. திடுக்கிட்டு அவளைத் தூக்கி அவனுக்கு முன்னே நிமிர்த்தி அவளைப் பார்த்தான் அருளானந்தன்.
வண்டு வந்து அமர தலை சாயும் இள மலர் போல, சொல்வியும் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்து, அவனது தொடையில் சாரத்தின் கோடுகளில் விரல் நகத்தால் கோடு கீறினாள்.

“சொல்வி, என்ன கேட்டனி... ” எனக் கேட்டு அவளது நாடியில் தனது வலது கையை ஆதரவாக வைத்து அவளது முகத்தை நிமிர்த்தி அவளது கண்களைப் பார்த்தான். அவனது பார்வையைச் சந்திக்க முடியாத அவள், விழிகளைத் தாழ்த்தி;

“உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க ஏலாது அருள்” என்றாள்.

அவளை இழுத்து, அணைத்து, அவளது கழுத்தில் முத்தமிட்ட அருளானந்தன்;
“எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சு போக வேணும் எண்டு ஆசையா சொல்வி... எனக்கு என்ன செய்யுறதெண்டே தெரியல்ல... சொல்வி...” எனச் சொல்லும் போதே அருளானந்தனின் குரல் தழுதழுத்தது.

இப்போது சொல்வி சிறிது மனந் தெளிந்தவளாக, எழுந்திருந்து அருளானந்தனைப் பார்த்து,

“எனக்குத் தெரியும் அருள்...” என்று சொல்லி சொல்வி அருளானந்தனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.
“என்ன தெரியும்...” என்றான் அருளானந்தன்.
“உனக்கு ‘விசா’ (Visa) இன்னும் நாலோ ஐஞ்சோ மாதத்தில முடியுதெண்டு... நாங்க யோசிச்சிருந்தது போல, யாழ்ப்பாணத்துக்கும் போக ஏலாது... அதுதானே உன்ர யோசனை...” எனச் சொல்லி அருளானந்தனைப் பார்த்தாள்

“ம்...” என்றான், எதுவித உணர்ச்சியுமில்லாமல்.
“இதுக்கு ஒரு வழியிருக்கு... நான் சொல்றதைக் கேட்பியா அருள்...” என அவனது முகத்தை தனது இரு கைகளாலும் ஏந்திப் பிடித்தபடி கேட்டாள் சொல்வி.

அதற்கும் அருளானந்தன் 
“ம்...” என்றான். ஆனால் இப்போது சொல்வியின் விழிககளுக்குள் பார்த்தபடி.

“நானும் நீயும் இப்ப கலியாணம் கட்டினா; நீ நோர்வேயில இருக்கலாம்... ஒரு வேலை செய்யலாம்... இலங்கேல பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்த பிறகு நீ நினைச்ச மாதிரியே அங்க போய் ஒரு engineering firm (பொறியில் ஸ்தாபனம்) ஆரம்பிக்கலாம்... என்ன சொல்றாய்...” என அருளானந்தனை வாஞ்சையோடு பார்த்தாள் சொல்வி.

“உதத்தான் ரகுவும் கார்ல போகேக்க சொன்னவன்... ஆனா...” எனத் தொடருமுன் இடைமறித்த சொல்வி,
“என்ன அருள்... ஏன் என்னைக் கலியாணங் கட்ட மாட்டியா...” என ஏக்கத்தோடு பார்த்துக் கேட்டாள் சொல்வி.

“ஹேய்... உன்னைக் கலியாணங் கட்ட எனக்கு விருப்பமில்லையெண்டா உனக்கு மோதிரம் போட்டிருக்க மாட்டன்... நீ அதை ‘முட்டை இட்ட கோழி’ மாதிரி கொக்கரிச்சுக் கொண்டு உலகத்துக்கு காட்டவும் விட்டிருக்க மாட்டன்.” என விரக்தியோடு சொன்னான்.

மெல்லப் புன்னகைத்த சொல்வி மிக மென்மையாக,
“அப்ப என்ன யோசிக்கிறாய் அருள்” என்றாள்.

“சொல்வி... யார் என்ன சொன்னாலும், நான் உன்னைக் கலியாணங் கட்டூறதெண்டுதான் மோதிரம் போட்டனான்... ஆனா... இந்த நேரம் திடீரெண்டு ரெண்டு பேரும் கலியாணங் கட்டினா... எல்லாரும் சொல்லுவாங்கள் சந்தர்ப்பம் பாத்துச் செய்தது எண்டு...” என அருளானந்தன் தொடருமுன்,

“யார்...” என சொல்வி சொல்ல வந்ததைச் சொல்ல விடாமல் தடுத்த அருளானந்தன்

“இன்னும் ஒண்டு, உனக்கு நிறைய விருப்பங்கள் ஆசையள் எல்லாம் wedding ceremonyல (திருமண வைபவம்) இருக்கு... எவ்வளவோ plans(ஏற்பாடுகள்) எவ்வளவோ dreams (கனவுகள்) இருக்கு... இப்ப போய் திடுதிப்பெண்டு செய்யிறதெண்டா... நேரமும் காணாது... காசும் இல்லை... எனக்கு என்னால உன்ர dream wedding இல்லாம போறதத் தாங்கேலாது. சொல்வி... ” என மிக ஆற்றாமையுடன் சொல்லி முடித்தான் அருளானந்தன்

சொல்வி தனது இரு கைகளாலும் அருளானந்தனின் முகத்தை ஏந்திப் பிடித்து,
“ஹேய்... ஸில்லி போய்... றிலாக்ஸ்... (silly boy... relax... ஏய்... முட்டாள் பயலே... பதட்டப்படாத...” எனச் சொன்ன சொல்வி, தொடர்ந்தாள்.

“யார் என்ன சொன்னாலும் பறவாயில்லை!  நாங்க கலியாணங் கட்டுறதெண்டு எப்பவோ முடிவு செய்தனாங்கள்... எப்பவோ ஒரு நாள் நடக்கப்போற கலியாணம்; இப்ப நடந்தா என்ன... ஓ... சிலர் அப்பிடியும் கதைக்கத்தான் செய்வினம் கதைச்சா... கதைச்சுட்டுப் போகட்டும். ஆனா... அதால எங்களுக்கு எதுவும் நடக்கப் போறதில்லைத்தானே...” என்றவள் நிறுத்தி தன்னை ஆசுவாசப் படுத்தினாள்.

அருளானந்தன் அவளை வைத்த கண் வாங்காது பார்த்தபடி இருந்தான். சொல்வி தொடர்ந்தாள்.

“ஓ...! எனக்கு எங்கட கலியாணத்தில எவ்வளவோ dreams இருக்கு... அதெல்லாம் இல்லாமல் போகாது ஸில்லி (முட்டாள் silly)...” என அருளானந்தனின் மூக்கைப் பிடித்து ஆட்டிச் சிரித்தாள்.

“எப்பிடி...” என அங்கலாய்ப்புடன் கேட்டான் அருளானந்தன்.

“நாங்கதானே ரெண்டு கலியாணங் கட்டப் போறம்... தமிழ்க் கலியாணத்தை நீ அண்டைக்குச் சொன்னது போல, இங்கயும் ஏற்றுக் கொள்ள மாட்டாங்கள். நீயும் நானும் ‘சேர்ச்’ல (church) அல்லது ‘திங்ஹுிஸ்ஸில’ (Courthouse)தான் கலியாணம் செய்ய வேணும்...” என சொல்வி நிறுத்தியபோது, அருளானந்தன் இன்னும் ஒன்றும் பேசாமல், அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்.

சொல்வி தொடர்ந்தாள்,
“நீ இப்ப ‘ஓம்’ எண்டு சொன்னாப் போதும், நான் நாளைக்கு அம்மாவுக்குச் சொன்னா அடுத்த மாதமே எங்கட weddingஐ அம்மா, அப்பா, தம்பி எல்லாரும் எல்லாம் செய்வினம். 
எங்கட சொந்தக் காரரோட என்ர friends உன்ர  friends எல்லாரும் வருவினம்... நாங்கள் போய் ‘தாலி’ கட்டியிட்டு ரெண்டு நாள் நிண்டுட்டு வந்து படிப்பை முடிக்கலாம்.” எனச் சொல்லிச் சிரித்தாள் சொல்வி.

அதிசயத்தோடு அருளானந்தன்,

“என்ன சேர்ச்சில தாலி கட்டுறதா...” என கேட்டான்.

“Oh... My god... You are so gullible...(என்ர கடவுளே நீ நம்பியிட்டியா...) ” எனச் சொல்லிச் சிரித்தாள் சொல்வி.

“அப்ப... உன்ர dream wedding உதுதானா...” எனக் கேட்டான்.

“ஆ... இல்லை... பிறகு ஆறுதலா... தமிழ் weddding. நான் ‘சாறி’ கட்டி, நகை போட்டு, தலை நிறைய பூச் சூடி, ஒரு ‘ஆச்’ (arch) மாதிரி வைப்பாங்கள் அதில இருக்க நீ தாலி கட்டுவியாம்...” எனக் குழந்தை போல, சொல்வி சொல்ல அருளானந்தன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“என்ன நான் சொல்றதில பிழையிருக்கா...” என அங்கலாய்ப்புடன் கேட்டாள்.

“இல்லை... நீ குழந்தை போல கதைச்சதைப் பாத்து சிரிச்சன்... அது உனக்கு விருப்பமெண்டா; எனக்கும் சம்மதம்... ” என்று சொல்லி சொல்வியை அணைத்தான் அருளானந்தன்.

அருளானந்தனை இறுக அணைத்து அவனது முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள் சொல்வி. அருளானந்தனும் ஆசையோடு அவளின் முத்த மழையில் திளைத்தான்.
“அருள்... எனக்கு உடம்பெல்லாம் ஏதோ ஒரு மாதிரியிருக்கு... எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது... அருள்..” எனச் சொல்லி அவனது மார்பில் சாய்ந்து அவனை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“ஹெய் பயப்பிடாத... நான் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டன்... றிலாக்ஸ்...” எனச் சொல்லி அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

“அருள்... நீ எனக்கு வேணும்... எனக்கு மட்டும் வேணும்...” எனச் சொன்ன சொல்வி அருளானந்தனின் உதடுகளில் தனது உதடுகளைப் பதித்தெடுத்தாள்.

“எனக்கும் நீ என்ர கையுக்குள்ளயே இருக்க வேணும் எண்டதுதான் விருப்பம்... ஆனா friends எல்லாரும் சொல்லுவாங்கள் முறையா சொல்வியை மடக்கி தன்ர காரியத்தைச் சாதிச்சுட்டான் எண்டு...” என அருளானந்தன் சொல்லி முடிக்க, 

“Hei, Arul... I don't care about your friends or what they say... I hope you also do so...(ஹெய் அருள்... உன்ர நண்பர்களைப் பற்றியோ அவையள் கதைக்கிறதைப் பற்றியோ எனக்கு அக்கறை இல்லை... நீயும் அப்படிச் செய்ய வேணும் எண்டு நான் விரும்புறன் )” என்றாள் சிறிது கடுகடுத்த தொனியில்.

சொல்விக்கும் அருளானந்தனின் சில நண்பர்களுக்கும் இடையில் மனக்கசப்பு. பல வேளைகளில் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் சொல்வி அருளானந்தனிடம் சொல்லியிருக்கிறாள்.

அந்த சூழ்நிலையை, அந்த மனவோட்டத்தை மாற்ற எண்ணிய அருளானந்தன்,

“ஹேய்... பன்ரெண்டு மணியாச்சு வா போய் படுப்பம்... நாளைக்கு Universityக்குப் போக வேணும்” என்றான்.

”ம்... ம்... ம்... நாங்க நாளைக்கு Universityக்குப் போகப் போறதில்லை...”

“என்ன... நாங்களோ...?” எனக் கேட்டான் அருளானந்தன்.

அவன் மார்பில் இதமாக முகம் புதைத்துச் சுகமான சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த சொல்வி,

“நாங்க எண்டா... நானும் அந்தக் கீழ் மாடியில இருக்கிறான் அந்த ஆபிரிக்கக்காரனும்...” என்ற சொல்வி, சிரித்தாள்.

“Heeeiii, my beautiful angel is back... (ஹே...ய்ய்ய்... என்ர அழகு தேவதை வந்திட்டாள்)” எனச் சொல்லி அவளை இன்னும் இறுக தன் மார்போடு அணைத்தான் அருளானந்தன்
அவளும் சிரித்தபடி அருளானந்தனின் மார்பில் தனது வலது கை சின்ன விரல் நகத்தால் கோலமிட்டாள்.

“ஹேய்... ரகு சொன்னான்... நீயும் அந்த ஆபிரிக்காரனும் ‘கிஸ்’ பண்றத பாத்ததெண்டு...” என அருளானந்தன் சொல்லி முடிக்குமுன் அவனது மார்பை விட்டு எழுந்த சொல்வி அவனது மார்பில் ‘தும்... தும்... தும்’ என ஒலி எழும்பும் வண்ணம் தனது இரு கைகளாலும் குத்தினாள்.

“வரட்டும் அந்த donkey Ragu... (கழுதை ரகு...) நான் அவன்ர பல்லு முப்பத்திரண்டையும் கழட்டுறன்..” என்று சொல்லி அருளானந்தனை ஆழமாகப் பார்த்தாள்.

“ஹேய்... என்ன அப்பிடிப் பாக்கிறாய்... நான் சும்மா உன்னை ‘ற்ரெஸ்ற் (test) பண்ணின்னான்... அவன் அப்பிடியெல்லாம் சொல்லேல்ல...” எனச் சொல்லி சொல்வியை அணைத்தான்.
சொல்வியும் அவனது மார்பில் சாய்ந்தபடி,

“உன்ர முட்டாள் ‘பிரெண்ட்ஸ்ஸை’ - friends- நம்பேலாது... என்னவும் ஏறுமாறாச் சொல்லுவாங்கள்...” என்றாள்.

“ம்... அது நோர்வேயில நடந்தது... நீயும் ஹன்னாவும் சுத்துறதைப் பாத்துட்டு நீயும் அவளைப் போல எண்டு சொன்னாங்கள்... ஆனா... ஆனா... நான் ஏதாவது உன்னட்டக் கேட்டனானே... இல்லையே... ஏனெண்டா... எனக்கு உன்னைப் பற்றி தெரியும்...” என மூச்சு விடாமல் சொல்லி முடித்த அருளானந்தன் அவளை தன் மார்பிலிருந்து நிமிர்த்தி, அவளது அழகான ரோஜா வர்ண உதடுகளில் முத்தமிட்டான்.

“அருள்... உன்ர ‘பிரெண்ட்ஸ்’ஸின்ர கதையைக் கேட்டுட்டு வந்து என்னோட சண்டை போட மாட்டியே...” என மிகவும் ஆதங்கத்துடன் கேட்டாள் சொல்வி.

“அடியேய்... எப்படி நான் அப்படிச் செய்தனான்...” என அருளானந்தன் சினந் தோய்ந்த குரலில், தமிழில்க் கேட்டான்.

“எப்பவுமே நீ அப்பிடி நடந்ததில்லை... ஆனா... இப்ப மாதிரியே நானும் இருக்க வேணும்... நீயும் இருக்கவேணும்...” எனச் சொல்லி, சொல்வி வாஞ்சையுடன் அருளானந்தனைப் பார்த்தாள்.

அருளானந்தனோ ஆச்சர்யத்துடன் சொல்வியைப் பார்த்து,
“ஹேய்... உனக்குத் தமிழ் விளங்குது... எப்பிடி?” எனக்கேட்டான்.
‘ஓ... பிடி கொடுத்து விட்டோமோ...’ என சிறிது யோசித்த சொல்வி,

“ஹேய்... உன்னோட எத்தின வருஷமா இருக்கிறன்... ஒரளவுக்காவது தமிழ் விளங்க வேணும்தானே...” எனச் சொன்னாள்.
அவளைக் கண்களுக்குள் பார்த்து, 

“சொல்வி... இண்டைக்கு மாதிரியே எப்பவும் நானிருப்பன்... போதுமே...” எனச் சொல்லி சொல்வியின் வலது கையை எடுத்து தனது வலது கையை வைத்து உறுதி கூறினான்.

“எனக்கது போதும் அருள்... எனக்கது போதும்..” எனச் சொல்லியபடியே அவனது மடியில் படுத்தாள் சொல்வி.
அவனும் பால் போல வெளுத்த அவளது கன்னத்தில் ஆதரவாக கையால் வருடியபடி,

“நாளைக்கு Universityக்கு போகா விட்டா என்ன செய்யப் போறம்...” எனக் கேட்டான்.

“நீயும் நானும் கட்ட்ட்டிப்ப்பிடிச்சுக் கொண்டு பத்து மணிவரையும் படுத்திருப்பமாம்...”

“அ...” அருளானந்தன் அவளையும் அவளது குழந்தைத் தனமான கதையும் கேட்டு இரசித்துக்- கொண்டிருந்தான்.

“பிறகு நான் அம்மாவோட நிறையக் கதைக்க வேணும் எங்கட கலியாணத்தைப் பற்றி...”

“பிறகு...”

“நாங்க ரெண்டு பேரும் ‘பாக்’ கில கொஞ்ச நேரம் சுத்தியிட்டு...” என நிறுத்தி அருளானந்தனைப் பார்த்தாள்.

‘என்ன...’ என்பது போல அருளானந்தன் கண்களால்ப் பார்த்தான் சொல்வியை.

“நீ ‘பிறகு’ எண்டு ஒவ்வொண்டுக்கும் சொல்லுவாய் ஏன் சொல்லேல்ல... நீ திரும்ப உன்ர பிரெண்ட்ஸ்ஸைப் பற்றி நினைக்கிறியா... அருள்...” என அங்கலாய்த்தவளாக சொல்வி கேட்டாள்.

“இல்லை... இல்லை..., ஓ.கே. ‘பாக்’கில சுத்தியிட்டு பிறகு என்ன செய்வமாம்” என அவனும் அவளைப் போலவே  கேட்டு விட்டு, சொல்வியின் பொன்னிறக் கேசங்களை அளைந்து விளையாடினான்.
திரும்ப சொல்வி தனது குழந்தைத் தனமான குரலில்,

“பிறகு, ஒரு ‘றெஸ்ற்ரோரண்ட்’டில (restaurent) சாப்பிட்டுட்டு, வந்து ஒரு ‘கூத்து’ அடிப்பமாம்” எனச் சொல்லி இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள் சொல்வி.
அப்போது, அருளானந்தன் விரல்களை மடித்து எண்ணினான். அதைப் பார்த்து சொல்வி சிரித்தாள்.

“உங்கட கணக்குகள் எல்லாம் வித்தியாசமா, வினோதமாயிருக்கு புரிஞ்சு கொள்ளவே முடியாமல்க் கிடக்கு...” எனச் சொல்லி அவனது மடியில்ப் படுத்திருந்த சொல்வியின் மூக்கைப் பிடித்து இலேசாக ஆட்டிச் சிரித்தான்.

சொல்வியும் சிரித்தபடி,

“அதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே நல்லது...” என்றாள்.



(தொடரும்)