Wednesday 15 April 2015

படிக்காத மனைவி. - பாகம் - 1 நட்பும் காதலும்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

சம்பவம் என்னவோ முழுக்க முழுக்க உண்மை; ஆனால், பெயர்கள், வயதுகள், இடங்கள், சம்பவம் நடந்த காலகட்டம், உப பாத்திர சொருகல்கள் எல்லாம் எனது கற்பனை...
முதலில் அருளானந்தனின் ஆரம்பகால வாழ்க்கை; நோர்வேயிலும் சுவீடனிலும் எப்படி இருந்தது எனச் சொல்கிறேன்... அதைச் சொன்னால்த்தான் அருளானந்தனின் மன நிலை எப்படி இருந்தது என அறிந்து கொள்ளமுடியும்.



நட்பும் காதலும்.



அருளானந்தன் தனது இருபதாவது வயதில் நோர்வேயிற்கு மேற்படிப்புக்காக எழுபத்தெட்டாம் ஆண்டு வந்தவன்.

நான்கு வருட பல்கலைக்கழகப் படிப்பு முடித்த பின், சுவீடன் நாட்டு பல்கலைக் - கழகங்களில் ஒன்று அருளானந்தனை ஆராய்ச்சிப் படிப்பிற்காக அழைத்தது. இரண்டு வருடப் படிப்பு நான்கு வருடங்களானது. கலைமானிப் பட்டமும் பெற்றுக் கொண்டான்.

அவனது படிப்பில் முதலில் அவனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna). ஹன்னாவை அருளானந்தனுக்கு அவ்வளாகப் பிடிப்பதில்லை. காரணம் அவளது பொறுப்பின்மை, குடிப்பழக்கம், படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என காரணங்களுக்குக் குறைவில்லை.

அருளானந்தனுக்கு சொல்வியை பிடித்ததற்கு இன்னும் ஒரு காரணம்...
சொல்வி என்ற பெயர் ஓரளவிற்கு செல்வி என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்திருந்ததும்.

ஆக, ஒருநாள் அவளிடமே அவளது பெயருக்கு என்ன பொருள் எனக்- கேட்டுவிட்டான்.
"சொல்வி என்றால் காடு!! " என்றுவிட்டு அருளானந்தனைப் பார்த்தாள். 

"ஹா... " என வாயை விரித்து ஆச்சரியத்துடன் பார்த்தான்.

சொல்வியும் ஹன்னாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அருளானந்தனுக்கு ஏன் கேட்டோம் என்றாகி விட்டது...
பின்னர் சொல்வியே சொன்னாள்.

"காடும் ஒரு பொருள்... ஆனால் வெள்ளி என்பதும் ஒரு பொருள்..." என்று அவள் சொன்ன போது,

"ஓ... யா... சொல்வ் என்றால் வெள்ளி... " என வியந்தான் அருளானந்தன்.

"நான் கருவானது அம்மாவும் அப்பாவும் காட்டில் இருக்கும் எங்களது விடுமுறை குடிசைக்கு (cottage) சென்ற நேரம்... ஆக, அதுவும் எனக்குப் பொருந்தும்..." என்றாள்.

"தமிழில் செல்வி எனப் பெயருள்ளது... அதனால்த்தான் கேட்டேன்..." என்று அருளனாந்தன் சொன்ன போது;

அந்த இரு பெண்களுமே
"ஓ... அதனர்த்தம் என்ன" என ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

"செல்வி என்றால் பல அர்த்தங்களுண்டு. திருமணமாகத பெண்ணைச் சுட்டும் பெயர்... அதாவது உதாரணமாக செல்வி ஹன்னா என்பது போல... அடுத்து மகிழ்ச்சி, சந்தோஷம், வளமான, என்பவற்றோடு மகள் என்றும் பொருள்..." என்றான் அருளானந்தன்...

"அப்படியானால்... திருமணமான பின் பெயர் மாற்ற வேண்டுமா அது சிக்கலல்லவோ??" எனக் கேட்டாள் ஹன்னா.

"இல்லை... ஒரு பெண்ணின் பெயர் செல்வி என்றால்... அவள் திருமணமான பின் அவளது சுட்டுப் பெயர் திருமதி என மாறும்... இங்கே (f)ப்றோ(ø)க்கன் (frøken) என திருமணமாகாத பெண்ணையும் (f)ப்றுஎ (Frue) எனத் திருமணமான பெண்ணையும் சுட்டுப் பெயர்களால் அழைப்பதில்லையா... அது போல... ஆனல் செல்வி என்ற அவளது இடு பெயர் மாறாது..." என விளக்கினான் அருளானந்தன்.

பாரபட்சம் காட்டாமல்,

"ஹன்னா என்றால் என்ன பொருள்... " எனக் கேட்டான் அருளானந்தன்.

"ஹன்னா ஹீப்ரூ இலிருந்து வந்தது... கடவுள் கிருபை என்பததர்த்தம்..." என்றாள் ஹன்னா.

"அருளானந்தன் என்றால் என்ன அர்த்தம்? " சொல்வி கேட்டாள்
"அருள் என்றால்... Blessing of God கடவுளின் ஆசி... ஆனந்தன் என்றால்... மகிழ்ச்சியானவன்... ஆக, அருளானந்தன் என்றால் கடவுளின் ஆசியால் மகிழ்ச்சியாய் இருப்பவன் என்பதர்த்தம்" என்று அருளானந்தன் சொல்லி முடிக்கையில்...

"Of cours you are... (நிட்சயமாக அது போலவே இருக்கிறாய்...)" என்றாள் சொல்வி.

"Thank You..."என நன்றி தெரிவித்தான் அருளானந்தன்.


சொல்வி என்ற பெயர் செல்வி என்ற தமிழ்ப் பெயரை ஒத்ததாக இருந்தால், அருளானந்தனுக்கு அந்தப் பெயரும் வெகுவாகப் பிடித்திருந்தது.

ஹன்னாவினுடைய தந்தை தனது நிறுவனத்தில் மூவருக்கும் வேலை தருவதாச்சொன்னார். ஆனால் அருளானந்தன் கலைமானிப் பட்டப் படிப்பைத் தொடரத் தீர்மானித்து, ஹன்னா வின் தந்தையினது அழைப்பை நிராகரித்தான்.

அதேபோல, சொல்வியும் ஹன்னாவினுடைய தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாது, பட்டப் படிப்பை அருளானந்தனோடு பயில விரும்பினாள். சுவீடன் நாட்டு அந்தப் பல்கலைக்கழகமும் இருவரையும் அனுமதி தந்து வரவேற்றது.

சொல்வி அருளானந்தனோடு கலைமானிப் பட்டப்படிப்பைத் தொடர அவனோடு சுவீடன் வந்தது; அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் ஒரே மாடியில் ஒரே தளத்தில் பக்கம் பக்கமான அறைகளில் தங்கியிருந்து படித்தார்கள்.

இவர்கள் இருவருக்குள்ளும் மிக இறுக்கமான பிணைப்பு ஏற்பட்டது. ஏன் அப்படியெல்லாம் சுற்றி வளைக்க வேண்டும்... இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

-- இங்கே காதல் அல்லது திருமணம் என்ற பந்தங்கள் இல்லாமலே பாலியல் உறவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வைத்துக் கொள்ளலாம். தவறே இல்லை.  இன்றைய இளைஞர் கட்சிப் பேச்சாளர்; கலவியியல்க் கல்வி நோர்வே நாட்டின் பாடத்திட்டத்தில் செய்முறைப் பயிற்சியோடு உள்ளடக்கப் பட வேண்டும் எனக் கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக, அருளானந்தனும் சொல்வியும் உடலுறவு கொள்வது, விடுமுறை காலங்களில் இடங்கள் சுற்றிப் பார்ப்பது என அவர்களது நான்கு வருட கலைமானிப் படிப்புக் காலமும் மிக இனிமையாகக் கழிந்தது. அவர்களிருவருக்கும் பொதுவான விடயங்கள் என்றால்; கல்வியிலிருந்து கலவி உட்பட எல்லாமுமே...

ஒரு நாள் சொல்வி அதையும் அருளானந்தனிடம் சொன்னாள்.
"ஹெய்... எனக்கு பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிச்சிருக்கு... உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிச்சிருக்கு... எங்கள் இரண்டு பேரையும் சொர்க்கத்திலயே சேர்த்து வைக்க முடிவு செய்திருக்கு போல...'match made in heaven'" என்று சொல்வி சொல்ல;

"எனக்கு கார உணவு பிடிக்கும்... உன்னால் அதை உண்ண முடியாதே..." என பதில் சொன்னான் அருளானந்தன்.

"எனக்கு பிடிக்காதெண்டு நான் சொல்லேல்லயே... நீ கொஞ்சம் உறைப்பை குறைச்சு கறி சமைச்சா நானும் 'enjoy' பண்ணுவன்..." எனக் கூறி அவன் மடியிலமர்ந்து செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளி விட்டு உதடுகளில் முத்தமிட்டாள்.

ஹன்னாவின் குறுக்கீடு இல்லாமல் இருவரும் சுவீடன் வந்தபோதே அவர்களுக்குள் காதல் வளர ஆரம்பித்தது. நோர்வேயில் இருந்தபோது, இருவரிடமும் ஒரு ஈர்ப்பு இருந்தது, என்னவோ உண்மை.

சுவீடனில் இருவரும் தனித்தனி அறை விலாசங்கள் வைத்திருந்தாலும், சொல்வி, அருளானந்தனின் அறையில்த்தான் எல்லாமுமே.
உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது எல்லாம்.

ஒரு நாள் குழந்தைகள் காப்பகங்களைப் பற்றிய ஒரு விவரணம் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். அப்போது, ஒரு ஆபிரிக்க - சுவீடன் குழந்தையைக் காட்டினார்கள். அதைக் கண்டவுடன் சொல்வி,

"மிக அழகான குழந்தை என்ன..." என்று விட்டு உடனேயே

"எனக்கும் உனக்கும் குழந்தைகள் பிறந்தால் இப்படி அழகாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் இல்லையா..." என அருளானந்தனின் மார்பில் சாய்ந்திருந்து தொலைகாட்சி பார்த்த சொல்வி தலை நிமிர்த்தி அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள்.

அருளானந்தன், சொல்வியின் முகத்தை இரு கைகளாலும் அள்ளியெடுத்து கனிவான ஒரு முத்தம் அவளது உதடுகளில் பதித்தான். பின்னர்

"நானும் அதைத்தான் யோசிச்சனான்..." என்ற அருளானந்தன்,

"அது சரி... குழந்தைகள் என்றால்... எத்தனை குழந்தைகள் பெறப் போகிறோம்?" என அருளானந்தான் சொல்வியை இழுத்து மடியில் படுக்க வைத்துக் கேட்டான்.

நிமிர்ந்து அருளானந்தனின் மடியில் படுத்திருந்த சொல்வி, அருளானந்தனை பார்த்து, வலது கையில் பெரு விரலை மடித்துக் கொண்டு மிகுதி நான்கு விரல்களையும் விரித்துக் காட்டி விட்டு நாணம் மேலிட, சொல்வியின் முகமும் குங்குமாகச் சிவக்க இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

"ஹேய்... உன்ர உடம்பு தாங்காது... ரெண்டு போதும்..." எனச் சொல்லிய படியே அவளது இரு கைகளையும் எடுத்து அவற்றிற்கு முத்தங் கொடுத்தான் அருளானந்தன்.

"ஊகும்... அதெல்லாம் முடியாது... ரெண்டு ஆணும் ரெண்டு பெண்ணும்... " எனச் சொல்லி விட்டு, நாணம் இரத்தச் சிவப்பை சொல்வியின் முகத்தில் பூச, உடனேயே திரும்பி அருளானந்தனின் அடி வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொணடாள் சொல்வி...

அருளானந்தன், சொல்வியின் தங்க நிறத் தலை மயிர்களை விரல்களால்க் கோதிவிட்ட படி,
"உனக்கு விருப்பமெண்டா... எனக்கும் விருப்பம்தான்... எனக்கென்ன விதைக்கிற மட்டுந்தானே... சுமக்கிறது... அறுவடை செய்யிறது... பிள்ளயளை நல்ல பிள்ளயளா வளர்க்கிறது... எல்லாம் உன் பொறுப்பு..." என்று சொல்லி சொல்வியின் சிவந்த கன்னத்தில் முத்தமிட்டான்.

உடனே சொல்வி எழுந்து, அருளானந்தனைப் பார்த்து;
"அப்பா ஸ்தானத்தில இருந்து என்ன செய்ய வேணுமோ அவ்வளவும் நீ தான் செய்ய வேணும்... இது Sri Lanka இல்ல..." என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு, அருளானந்தனைப் பார்த்தாள்.

"நீ என்னென்ன சொல்றியோ அதெல்லாம் நான் செய்யிறன்..." எனச் சொல்லிவிட்டு, சொல்வியை இறுக அணைத்து ஆழமாக முத்தமிட்டான் அருளானந்தன்.



தொடரும்...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...